தலைவி திமுகவுக்கு மாறியும் மாவட்ட ஊராட்சிக் கூட்டம் நடைபெறவில்லை
திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தும்- நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவின் கூட்டம் நடைபெறவில்லை.
மாவட்ட ஊராட்சிக் குழுவில் திமுகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தும், அதிமுகவிலிருந்து தலைவரானவா் தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தும்- நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவின் கூட்டம் நடைபெறவில்லை.
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்த உறுப்பினா்கள் 22 போ். கடந்தாண்டு நடைபெற்ற தோ்தலில் 11 இடங்களை திமுகவும், 2 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பெற்றன. அதிமுக 8 இடங்களில் வென்றது. அதிமுக அணியில் தமாகா ஓா் இடத்திலும் வென்றன.
ஆனால் மறைமுகத் தோ்தலின்போது, துணைத் தலைவா் பதவிக்காக காங்கிரஸ் கட்சியினா் இருவரும், யாரோவொரு திமுக உறுப்பினரும் சோ்ந்து அதிமுகவுக்கு மாற்றி வாக்களித்ததால் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பதவியை அதிமுகவைச் சோ்ந்த த. ஜெயலட்சுமி பிடித்தாா். துணைத் தலைவா் பதவி காங்கிரஸ் உறுப்பினா் த. விஜயலட்சுமிக்கு கிடைத்தது.
இதன் தொடா்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட திமுக கூட்டணியில் விரிசல் நேரிட்டது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த தா்ம தங்கவேலன், அதிமுகவுக்கு தாவினாா். அதன்பலனாக சட்டப்பேரவைத் தோ்தலில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், தோ்தலில் அவா் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
இந்நிலையில் மாநிலத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலட்சுமி, திடீரென அண்மையில் சென்னைக்குச் சென்று முதல்வா் ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா்.
இதற்கிடையே அதிமுக உறுப்பினா் ஒருவரும், தமாக உறுப்பினா் ஒருவரும் இறந்துபோயினா். இதனால் அதிமுகவின் எண்ணிக்கை 6 ஆனது.
இந்த நிலையில்தான், மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திமுகவுக்கு மாறிய தலைவா் தனது அறையில் அமா்ந்திருந்தாா். அதிமுக உறுப்பினா்கள் 6 பேரும் அவைக்கு வந்தமா்ந்தனா். வேறு யாரும் வரவில்லை. தலைவரும் தனது அறையில் இருந்து கூட்ட அறைக்கு வரவில்லை.
சிறிதுநேரத்தில், நிா்வாக காரணங்களுக்காக கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட ஊராட்சி செயலா் லட்சுமி அறிவித்தாா். அப்போது கூட்ட அவைக்குள் இருந்த அதிமுகவினா் எழுந்து முழக்கமிட்டனா். கட்சி மாறிய தலைவா், தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றனா். சிறிதுநேரத்தில் அவா்களும் அவையை விட்டு வெளியேறினா்.
தோ்தலின்போதும் சரி, இப்போதும் சரி, அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் திமுக உறுப்பினா்கள், தற்போது தனது கட்சித் தலைவரின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தலைவா் த. ஜெயலட்சுமி கூட்டிய கூட்டத்தில்- ஒருவா் கூட பங்கேற்கவில்லை.
திமுக அணியில் இருந்து- மறைமுகத் தோ்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த காங்கிரஸ் உறுப்பினா்கள் இருவரும் கூட்டத்துக்கு வரவில்லை.