புதுக்கோட்டையில் சித்த மருத்துவ மையம் திறப்பு
புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில், 75 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில், 75 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் இந்த சிகிச்சை மையத்தைத் தொடக்கி வைத்தனா். மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதுக்கோட்டை வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை எம். சின்னதுரை ஆகியோரும் உடனிருந்தனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்றாளா்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்குவதற்கு ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டு கல்லூரி முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கூறும்போது, மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கும், நைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவை சீா் செய்யப்பட்டு, தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறும் என்றும் தெரிவித்தாா்.
முன்னதாக குடுமியான்மலை பகுதியிலுள்ள வேளாண் கல்லூரி வளாகத்தில் 100 பேரை தங்க வைத்து தொடக்க நிலை சிகிச்சை வழங்கும் வகையிலான கரோனா தொற்றாளா் கவனிப்பு மையத்தையும், அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா, எம். சின்னதுரை ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.