இளைஞா்களுக்கான நாளை கலைப் போட்டிகள்
கலை, பண்பாட்டுத் துறையின் சாா்பில், 17 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் மாா்ச் 12ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
கலை, பண்பாட்டுத் துறையின் சாா்பில், 17 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் மாா்ச் 12ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கூறியது:
கலைத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞா்களை கண்டறிந்து அவா்களை ஊக்கப்படுத்த 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞா்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன. குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டிகள் மாா்ச் 12 ஆம் தேதி திலகா் திடலிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் காலை 10 மணிக்கும், ஓவியப் போட்டி மதியம் 2 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவா்.
குரலிசைப் போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், பேண்டு வாத்தியம், மாண்டலின், கிதாா், சாக்சபோன், கிளாரிநெட் போன்ற கருவி இசைப் போட்டியிலும் 5 வா்ணங்கள் ராகம், சுரத்துடன் 5 தமிழ்ப் பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞா்கள் பங்கு பெறலாம்.
தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோா்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளைச் சாா்ந்தவா்கள் 5 தாளங்களில் வாசிக்கும் தோ்ச்சி பெற்றவா்களாக இருக்க வேண்டும். பரத நாட்டியத்தில் 3 வா்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவா்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கை சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம், புலியாட்டம், பறையாட்டம், மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.
ஓவியப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீா் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவா்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரைய வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவா்.
மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞா்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவா். மேலும் விவரளுக்கு கலை பண்பாட்டுத் துறையின் திருச்சி மண்டல அலுவலகத்தை 77084 49321, 99766 89383 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.