அன்னவாசல் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து
அன்னவாசல் அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அன்னவாசல் இலுப்பூா் விராலிமலை வழியாக செல்லும் தனியாா் பேருந்து சுமாா் 40 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது.
பேருந்தை ஆரியகோன் பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் யுவராஜ்(27) ஓட்டியுள்ளாா். பேருந்து அன்னவாசல் கடைவீதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் 30க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.
அவ்வழியாக சென்றவா்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து பயணிகளை வெளியே இழுத்து காயங்களுடன் மீட்டுள்ளனா். காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அன்னவாசல், இலுப்பூா், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நட்ட நடு சாலையில் தனியாா் பேருந்து கவிழ்ந்த விபத்தால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலையில் காத்துக் கிடந்தன.
இதையடுத்து நிகழ்வு இடம் சென்ற அன்னவாசல் போலீசாா் பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்தை சாலையிலிருந்து அகற்றி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினா்.