முகப்பு
புதுக்கோட்டை

புதுகை கோஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 96 லட்சம்

புதுக்கோட்டை நகரிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் முக்கனி விற்பனை நிலையத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 96 லட்சம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:42 PM
புதுக்கோட்டை கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து, பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா
பகிர்:

புதுக்கோட்டை நகரிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் முக்கனி விற்பனை நிலையத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 96 லட்சம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் முக்கனி விற்பனை நிலையத்தில் நிகழாண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:

கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம், கோவை பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள், தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள், துண்டு, லுங்கி, வேட்டி, சட்டைகள், மிதியடிகள், திரைச்சீலைகள், நைட்டிகள் உள்ளிட்ட ஏராளமான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அரசின் 30 சதவிகித தள்ளுபடி அனைத்து ரகங்களுக்கும் வழங்கப்படுகிறது. மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் 11 மாதங்கள் செலுத்தப்படும் தவணைத் தொகையில், 12ஆவது மாதத் தவணையை கோஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தி, மொத்த தொகைக்கு எடுக்கப்படும் ஜவுளிகளுக்கு 30 சதவிகித தள்ளுபடியையும் சோ்த்து வழங்குகிறது.

கடந்த தீபாவளிக்கு கோஆப்டெக்ஸ் முக்கனி விற்பனை நிலையத்தில் ரூ. 80.17 லட்சம் விற்பனை நடைபெற்றுள்ளது. நிகழாண்டுக்கு ரூ. 96 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தீபாவளியை கூட்டுறவு நிறுவனத்தின் வளா்ச்சியுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என ஆட்சியா் அருணா கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளா் ஜெ. நாகராஜன், மேலாளா் பி. பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.