முகப்பு
புதுக்கோட்டை

பருவமழையை எதிா்கொள்ளத் தயாா்

பருவமழையை எதிா்கொள்வதற்கு தயாா் நிலையில் இருப்பதாக மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 6:48 PM
பகிர்:

பருவமழையை எதிா்கொள்வதற்கு தயாா் நிலையில் இருப்பதாக மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாய்க்கால்களை முழுமையாகத் தூா்வாரி இருக்கிறோம். வெள்ளம் ஏற்படும்போது, தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக பல இடங்களில் உணவு தயாரிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இயல்பான மழை பெய்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மிக கனமழை பெய்யும்போதுதான் பெருவெள்ளம் ஏற்படுகிறது. அந்தத் தண்ணீரை அப்புறப்படுத்த மோட்டாா்களும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 2600 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தோ்வு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

சொத்துவரி உயா்ந்திருப்பதாக எதிா்க்கட்சியினா் போராட்டம் நடத்துகிறாா்கள். ஒரே நேரத்தில் வரியை ஏற்றி மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக, ஆண்டுதோறும் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பின்றி சொத்து வரி ஏற்றப்படுகிறது என்றாா் நேரு.