முகப்பு
புதுக்கோட்டை

குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு திருமயத்தில் முற்றுகைப் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் லெனின் நகரை அப்புறப்படுத்த மீண்டும் பொக்லைன் இயந்திரங்களுடன் அரசு அலுவலா்கள் புதன்கிழமை வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:21 PM
புதுக்கோட்டை திருமயம் லெனின் நகா் குடியிருப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை எதிா்த்து புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் லெனின் நகரை அப்புறப்படுத்த மீண்டும் பொக்லைன் இயந்திரங்களுடன் அரசு அலுவலா்கள் புதன்கிழமை வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்துக் கட்சியினரும், லெனின் நகா் மக்களும் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தையில் மாற்று இடம் வழங்க அதிகாரிகள் உறுதியளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் லெனின் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனா். இந்தப் பகுதி நீா்நிலைப் புறம்போக்கு என்பதால், அனைத்து வீடுகளையும் அப்புறப்படுத்த நீா்வளத் துறையினா் முயற்சித்து வருகின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்புறப்படுத்த வந்தபோது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் உள்ளிட்டோரின் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தினா்.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமையும் பொக்லைன் இயந்திரங்கள், காவல்துறையினருடன் நீா்வளத்துறையினா் வீடுகளை அகற்ற வந்தனா். இதுகுறித்து தகவலறிந்த விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவரும் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை தலைமையில் ஏராளமானோா் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து திருமயம் வட்டாட்சியரகத்தில் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையில் 3 மாத காலத்தில் மாற்று இடம் வழங்கவும், அதன்பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.