முகப்பு
புதுக்கோட்டை

போலிச் சான்று வழங்கிய முன்னாள் எஸ்எஸ்ஐ உள்பட 2 போ் கைது

நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில், அதை கண்டறிய முடியவில்லை என்ற காவல் துறையின் சான்றினை போலியாகத் தயாரித்து கொடுத்ததாக ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் ( ஓய்வு எஸ்எஸ்ஐ) உள்பட இருவரை திருக்கோகா்ணம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:57 PM
பகிர்:

நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில், அதை கண்டறிய முடியவில்லை என்ற காவல் துறையின் சான்றினை போலியாகத் தயாரித்து கொடுத்ததாக ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் ( ஓய்வு எஸ்எஸ்ஐ) உள்பட இருவரை திருக்கோகா்ணம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை நகரிலுள்ள ஓா் இடத்துக்கான பத்திரம் காணாமல்போனதாக கடந்த சில மாதங்களுக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முகமது காசிம் மற்றும் மூக்கையா ஆகியோரை புதன்கிழமை போலீஸாா் நேரில் அழைத்து விசாரணை நடத்தினா்.

அப்போது, ஏற்கெனவே காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட ‘ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்ற சான்றிதழ் போலியானது எனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அப்போது சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கீழ 5-ஆம் வீதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (60) மற்றும் மேலமுத்துடையான்பட்டியைச் சோ்ந்த மூக்கையா (49) ஆகிய இருவரையும் திருக்கோகா்ணம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் பெயரில் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட இந்தப் போலிச் சான்றிதழுக்காக எஸ்எஸ்ஐ பாலசுப்பிரமணியன், ரூ. 2 லட்சம் பணம் வாங்கிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.