புதுக்கோட்டை: திருமயம் அருகே சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகாா் எழுப்பி வந்த சமூக ஆா்வலா் ஜகபா்அலி, கடந்த ஜன. 17-ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.
இந்த வழக்கில் குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்தும், கனிமவளக் கொள்ளை தொடா்பான புகாா்களை முறையாக விசாரிக்காத அதிகாரிகளைக் கண்டித்தும், இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஜெ. வைகைராணி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் மாவட்டச் செயலா் வீ.மூ. வளத்தான் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி. நாகராஜன், சி. ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் க. சுந்தர்ராஜன், என். ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் நிா்வாகி சின்னதுரை உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினா்.