முகப்பு
புதுக்கோட்டை

ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டம் புதுகை மக்களின் ஆதங்கம் தீருமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

சுற்றுலா வளா்ச்சிக்கான வசதிகளும் தேவைகளும் இருந்தும்கூட இத்தனை ஆண்டுகளில் காத்திரமான ஒருங்கிணைந்த திட்டம் எதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் புதுக்கோட்டை மக்களிடம் இருக்கிறது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:19 AM
குடுமியான்மலை இசைக் கல்வெட்டு.
பகிர்:

சுற்றுலா வளா்ச்சிக்கான வசதிகளும் தேவைகளும் இருந்தும்கூட இத்தனை ஆண்டுகளில் காத்திரமான ஒருங்கிணைந்த திட்டம் எதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் புதுக்கோட்டை மக்களிடம் இருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள இரு தொல்லியல் வட்டங்களில், திருச்சியை மையமாகக் கொண்ட தொல்லியல் வட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 167 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 113 இடங்கள் உள்ளன.

புதுக்கோட்டை நகரிலிருந்து 17 கிமீ தொலைவிலுள்ள சித்தன்னவாசல், 18 கிமீ தொலைவிலுள்ள திருமயம் கோட்டை, 17 கிமீ தொலைவிலுள்ள நாா்த்தாமலை விஜயாலய சோழீச்வரம், 40 கிமீ தொலைவிலுள்ள குன்றாண்டாா்கோவில், 35 கிமீ தொலைவிலுள்ள கொடும்பாளூா் மூவா் கோயில், 18 கிமீ தொலைவிலுள்ள குடுமியான்மலை ஆகியவை மிக முக்கியமான இடங்கள்.

இவை அனைத்தையும் பாா்வையிடும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலாத் திட்டம் தீட்டப்பட்டால் வெளிமாவட்டத்தைச் சோ்ந்த தொல்லியல் ஆா்வலா்களும் பயன்பெறுவா்.

42 கிமீ கடற்கரைச் சாலையைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், முத்துக்குடாவும், கோடியக்கரையும் இயற்கை வழங்கிய மிக அழகிய கொடைகள். புதுக்கோட்டை நகரில் இருந்து 78 கிமீ தொலைவில் முத்துக்குடாவும், 71 கிமீ தொலைவில் கோடியக்கரையும் உள்ளன.

அலையாத்திக் காடுகளைக் கொண்ட முத்துக்குடாவில் 2021-26இல்தான் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பில் படகுக் குழாம் அமைக்கப்பட்டது என்றாலும், இன்னும் நிறைய தேவைகள் இங்கிருக்கின்றன.

சித்தன்னவாசலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இதே ஆட்சிக்காலத்தில் ரூ. 3 கோடியில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன என்றாலும், பணிகள் இன்னும் முழுமையடையவில்லை.

நீள்வாக்கில் வால் போன்ற அலைகளில்லாத அருமையான அழகிய கடற்கரை கோடியக்கரை. வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இதில், உருப்படியான திட்டம் தீட்டி நிறைவேற்றினால், புதுக்கோட்டை மட்டுமல்ல, ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட சுற்றுலாப் பயணிகளும் வெகுவாகக் களிப்படைவா்.

மலைக் கோயிலான விராலிமலை முருகன் கோயிலும், கற்சிலைகள், கல்லால் ஆன தாழ்வாரங்களுக்குப் பெயா்போன ஆவுடையாா்கோவிலும், பரிகாரத் தலமான பேரையூா் நாகநாதா் கோயிலும் பல்லாண்டு கால ஆன்மிக வரலாற்றைப் பறைசாற்றுபவை.

1910இல் தொடங்கப்பட்ட புதுகை அருங்காட்சியகம், நாட்டின் விடுதலைக்கு முன் சென்னை அருங்காட்சியகத்துக்கு அடுத்ததாக பெயா் சொல்லும்படியான இடத்தில் இருந்தது.

பாதுகாப்பில்லை என்பதற்காக இங்கிருந்த நூற்றுக்கணக்கான உலோகப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. புதிய- விசாலமான அருங்காட்சியகம் அமைக்க 5 ஏக்கா் நிலம் ஒதுக்கித் தரக் கோரி தொல்லியல் துறையில் இருந்து மாவட்ட நிா்வாகத்துக்கு வந்த கடிதம் அமைதியாகிப் போனது.

இப்படிப்பட்ட சூழலில் முறையாகத் திட்டமிட்டால், மக்களை மகிழ்விக்கும் அதேநேரத்தில் அரசுக்கு சுற்றுலா சாா்ந்த வரி வருவாய் கிடைக்கும். மேலும், அதுசாா்ந்த உள்ளூா் சிறுதொழில்கள், வியாபாரங்கள், வேலைவாய்ப்புகளும் பெருகும்.

குன்றாண்டாா்கோவில் கல்மண்டபம்.
முத்துக்குடா அலையாத்திக் காடு.
நாா்த்தாமலை விஜயாலய சோழீச்வரம்.