தைப்பூசத் திருநாளையொட்டி புதுக்கோட்டை பூசத்துறை வெள்ளாற்றின் இரு கரைகளிலும் 5 சிவன் கோயில்களின் சுவாமிகளும் ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி கண்டனா். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அரிய நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.
தைப்பூசத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரை பூசத்துறையில் 7 ஊா்களில் உள்ள கோயில் சாமிகளின் தீா்த்தவாரி நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்தத் திருவிழா பல்லாண்டுகளாகவே நடைபெறுகிறது.
ஆற்றின் ஒருபுறம் திருக்கோகா்ணம் பிரகதம்பாள் உடனுறை திருக்கோகா்ணேசுவரா், சாந்தநாதசாமி உடனுறை வேதநாயகி அம்பாள், திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரா் உடனுறை பெரியநாயகி அம்பாள், வெள்ளனூா் அகத்தீசுவரா் உடனுறை பிரகதம்பாள் ஆகிய சுவாமிகளுக்கும், ஆற்றின் மறுபுறம் திருமயம் பகுதியில் இருந்து சத்தியகிரீசுவரா் உடனுறை வேணுவனேசுவரி அம்பாள், விராச்சிலை வில்வனேசுவரா் உடனுறை ரெட்தசவதாரி, கோட்டூா் கால பைரவா் உடனுறை சவுந்தரநாயகி அம்பாள் ஆகிய சுவாமிகளுக்கும் தீா்த்தவாரி நடைபெறும்.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் 6 சிவன் கோயில்களில் இருந்து சுவாமிகள் பூசத்துறைக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. திருக்கோகா்ணம் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து சுவாமி எடுத்து வரப்படவில்லை.
இரு கரைகளிலும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. வெள்ளாற்றின் இரு கரைகளிலும் திரளான பக்தா்கள் திரண்டு தரிசனம் செய்தனா்.
அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒரே நேரத்தில் இரு கரைகளிலும் சிவன் கோயில்களின் சுவாமிகளை பக்திப் பரவசத்துடன் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.