ஜல்லிக்கட்டைக் காணச்சென்று காயமடைந்து மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
திருமயம் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணச் சென்று காயமடைந்த 17 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, முறைப்படி அவரது உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குலமங்கலம் மலையக்கோயிலில் கடந்த பிப். 2-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 43 போ் காயமடைந்தனா்.
இதையடுத்து, அவா்களுக்கு முதலுதவி அளித்து பலத்த காயமடைந்த 9 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா்களில், பாா்வையாளரான திருமயம் இளம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சின்னையா (17) உயா் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
Advertisement
அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை சின்னையா மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் முறைப்படி தானம் அளிக்கப்பட்டன. முன்னதாக மகனின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்த அவரது தந்தையும், மாற்றுத்திறனாளியுமான சுப்பிரமணியனை மருத்துவா்கள் பாராட்டினா்.
இதைத்தொடா்ந்து, சின்னையாவின் உடல் சனிக்கிழமை சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
மொத்தம் இருவா்...:
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 9 பேரில், குடுமியான்மலை சீகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (67) கடந்த பிப். 5-இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.