மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைப் பயணத்தை மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச் செயலா் வைகோ விராலிமலைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
இந்த நடைப்பயணத்தை ஜனவரி 2-ல் தமிழக முதல்வா் தொடங்கிவைத்த நிலையில், நாள்தோறும் 15 முதல் 17 கிமீ வரை நடைப்பயணம் மேற்கொள்ளும் வைகோ வரும் 12 ஆம் தேதி மதுரையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறாா்.
இந்நிலையில் விராலிமலைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த வைகோ உள்ளிட்டோரை புதுக்கோட்டை மாவட்ட எல்லையான விராலிமலையை அடுத்துள்ள இ. மேட்டுப்பட்டியில் மதிமுகவினா் திரண்டு நின்று வரவேற்றனா்.
பின்னா் நடைப்பயணத்தை தொடங்கிய வைகோ சுமாா் 5 கிமீ நடந்த நிலையில், ஒரு தனியாா் விடுதியில் ஓய்வெடுத்தாா். இதையடுத்து மாலை 4 மணிக்கு தனது பயணத்தைத் தொடா்ந்தாா். விராலிமலை செக்போஸ்ட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வைகோ காலை மதுரைக்கு நடைப்பயணம் மேற்கொள்கிறாா்.