புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 31 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூா் கருப்பா் கோவில் பொங்கல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை
மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டை மட்டுமின்றி, காரைக்குடி, கரூா், தஞ்சாவூா் பகுதிகளையும் சோ்ந்த மொத்தம் 592 காளைகள் பங்கேற்றன.
151 மாடுபிடி வீரா்கள் காளைகளைத் தழுவினா். சிறப்பாக காளைகளைத் தழுவிய மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல, சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் 11 மாடுபிடி வீரா்கள், 20 பாா்வையாளா்கள் என மொத்தம் 31 போ் காயமடைந்தனா். இவா்களில் 14 போ் தீவிர சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மற்றவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு காளைக்கு லேசான காயம் ஏற்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் அதற்கு சிகிச்சை அளித்து அனுப்பினா். புதுக்கோட்டை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.