புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் இலுப்பூா், அறந்தாங்கி, புதுக்கோட்டை கோட்டாட்சியரகங்கள் என மொத்தம் 4 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக்கம் நடத்திட தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை, இலுப்பூா், அறந்தாங்கி ஆகிய 3 வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள் என மொத்தம் 4 இடங்களில் பொதுமக்களுக்கான செயல்விளக்கம் அளிக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியரகத்தில் இந்தச் செயல்விளக்கத்தை ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான மு. அருணா தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்க்குமாா் உடனிருந்தாா்.
இதற்காக தோ்தல் ஆணையத்தின் பாதுகாப்பு வைப்பறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை வாக்களிக்கச் செய்து, யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபாட் கருவி மூலம் பாா்ப்பதற்கும், விளக்குவதற்கும் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் வரை இந்தச் செயல்விளக்கம் பொதுமக்களுக்காக அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.