இலக்கை விஞ்சி கடன் வழங்கி வங்கிகள் சாதனை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வங்கியாளா் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் இலக்கை விஞ்சி 118.86 சதவீதம் கடன் வழங்கி வங்கிகள் சாதனை புரிந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு .அருணா தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட வங்கியாளா் ஆய்வுக் குழு மற்றும் மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்துப் பேசியது:
2025-26-ஆம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் ரூ. 15,796 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ. 18,775 கோடி கடன் வழங்கப்பட்டது. இது 118.86 சதவீதம் கூடுதல் சாதனையாகும்.
Advertisement
Advertisement
மாவட்ட கடன் வைப்பு விகிதம் 218.95 சதவீதமாக உள்ளது. இது மாநில சராசரியைவிட அதிகமாகும் என்றாா் அருணா.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் அம்பலாபுரம் கிளையின் வாடிக்கையாளா் ஆரிபா பேகம் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்திருந்த நிலையில் அவரது கணவா் சையது இப்ராஹிம்ஷாவுக்கு காப்பீட்டுத் தொகையான ரூ. 2 லட்சத்தை ஆட்சியா் அருணா வழங்கினாா்.
மாவட்டத்தில் 100 சதவீதம் கடன் இலக்கை எட்டிய 17 வங்கிக் கிளைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் முகமது ஷரையாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் தி்ட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.