இணையவழி யோகாவில் சாதனை மாணவா்களுக்குப் பாராட்டு
புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் சாா்பில், ‘உடல் நலமே உலக வளம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இணையவழியிலான விழிப்புணா்வு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை புரிந்த திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு, அப்பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் ஆகியோா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.
அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும், குஜராத், கா்நாடகம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் சுமாா் 600-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 20 போ் இணைய வழியில் கலந்து கொண்டு உபவிஷ்த கோணாசனத்தின் இறுதி நிலையில் அசைவின்றி மூன்று நிமிஷங்கள் செய்தாா்கள். இந்த நிகழ்ச்சி சா்வதேச சாதனைப் புத்தகத்தில் சிறந்த சாதனையாகப் பதிவு செய்யப்பட்டது.
பாராட்டு நிகழ்ச்சியில், ஆத்மா யோக மைய நிறுவனா் ரெ. பாண்டியன், செயலா் புவனேஸ்வரி ஆகியோரும் கலந்துகொண்டு மாணவா்களை வாழ்த்தினா்.