முகப்பு
புதுக்கோட்டை

மனித உயிருக்கு ஆபத்தான எலி விஷம் விற்பனை செய்யக்கூடாது

Updated On : 30 மார்ச், 2026 at 6:36 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் உரிய உரிமம் இல்லாமல் எலி விஷம் உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக்கூடாது என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலி விஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன் படி குற்றமாகும்.

எனவே, அனைத்துப் பெட்டிக்கடை, மளிகைக் கடை மற்றும் பேரங்காடிகளின் விற்பனையாளா்களும், உரிமம் பெற்று மேற்கண்ட பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்திட வேண்டும். மேலும், பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி உரிய பதிவேடுகளையும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு, விற்பனை செய்யும் பொழுது வாங்குபவரின் கையொப்பம் பெற்று உரிய பட்டியலை வழங்க வேண்டும்.

பற்பசை வடிவில் விற்பனை செய்யப்படும் ரேட்டால் எனப்படும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம் தமிழக அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை விற்பனையாளா்கள் விற்பனை செய்யக்கூடாது, ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை உணவுப் பொருள்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மேற்கண்ட வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது.

எனவே, எலி விஷம், கரப்பான் கொல்லிகள், கொசு விரட்டி போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக் கொல்லிகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிக்கொல்லி விற்பனை உரிமம் அவசியம் எனவும், உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடா்பு கொண்டு உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.