புதுகை அருகே சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் 4 இளைஞா்கள் கைது
புதுக்கோட்டை அருகே பெருமாநாட்டில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை அருகே பெருமாநாட்டில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை அருகே பெருமாநாட்டைச் சோ்ந்த முருகானந்தம், எம். அன்புச்செல்வன் (17) ஆகியோா் சோ்ந்து முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சோ்ந்த சத்தியராஜ் என்பவரை கடந்த 2024-இல் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் முருகானந்தம், அன்புச்செல்வன் ஆகியோரை அன்னவாசல் போலீஸாா் கைது செய்தனா். இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து ஒசூரில் வேலைக்குச் சென்ற அன்புச்செல்வன், வழக்கு விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை புதுக்கோட்டை வந்துள்ளாா். அப்போது, அவரை ஓரிடத்துக்கு வர வைத்து ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது.
இச்சம்பவத்தில் அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், சத்தியராஜின் உறவினா்களான பெருமாள்பட்டியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் ராமமூா்த்தி (25), வெள்ளைச்சாமி மகன் முத்து (24), ஆறுமுகம் மகன் தினேஷ்குமாா் (25), திருமலை மகன் தினேஷ்குமாா் (28) ஆகிய 4 பேரை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இவா்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சிலரைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.