தஞ்சாவூர்

தஞ்சையில் கொலை செய்யப்பட்ட மாணவரின் சடலம் தோண்டி எடுப்பு: நண்பர்கள் 3 பேர் கைது

DIN

 தஞ்சாவூரில் மாயமான கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, அவரது சடலம் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (18). இவர் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் கேட்டரிங் முதலாமாண்டு படித்து வந்தார். செப்டம்பர் 30-ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற இவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் சரவணனின் பெற்றோர் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் சிலரை தேடி வந்த நிலையில், சரவணனின் நண்பரான வடக்கு வாசல் மிஷன் தெருவைச் சேர்ந்த எம். நந்தகுமார் (23) கரந்தை கிராம நிர்வாக அலுவலரிடம் அண்மையில் சரணடைந்தார்.
இவர் அளித்த தகவலின் அடிப்படையில்,  சரவணனின் நண்பர்களான வடக்கு வாசல் இரட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஏ. ஆனந்த் (19), கரந்தையைச் சேர்ந்த எஸ். நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் மேற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சரவணன் கொலை செய்யப்பட்டு பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் வெண்ணாற்றங்கரையில் புதைக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
இதையடுத்து, சரவணன் புதைக்கப்பட்ட இடத்தை ஆனந்த்,  நவநீதகிருஷ்ணன்,  நந்தகுமார் ஆகியோர் போலீஸாரிடம் திங்கள்கிழமை காட்டினர். அந்த இடத்தில் தஞ்சாவூர் வட்டாட்சியர் ஆர். தங்கபிரபாகரன், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலையில் தோண்டப்பட்டது. சுமார் 4 அடி ஆழத்தில் சரவணனின் சடலம் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்து 43 நாள்களாகிவிட்டதால்,  சடலத்தில் தோல்கள் அரிக்கப்பட்டு, எலும்புக்கூடாக இருந்தது. இச்சடலத்தை போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 ஆனந்த்,  நவநீதகிருஷ்ணன்,  நந்தகுமார் ஆகியோர் மாட்டு வண்டியில் ஆற்றில் மணல் அள்ளி விற்பனை செய்து வந்தனர். இவர்களும் சரவணனும் நண்பர்கள். இதனிடையே, சரவணனுக்கும், ஆனந்துக்கும் இடையே முன்விரோதம் காரணமாகச் சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஆனந்தை கொலை செய்துவிடுவதாக சரவணன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால், வடக்கு வாசல் அருகேயுள்ள விவசாயப் பண்ணையில் சரவணனை ஆனந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து செப்டம்பர் 30-ம் தேதி மாலை தாக்கினார். பலத்தக் காயமடைந்து சுயநினைவை இழந்த சரவணனை அக்டோபர் 1-ஆம் தேதி அதிகாலை மாட்டு வண்டியில் வைத்து, வழக்கம்போல மணல் அள்ளுவதற்குச் செல்வது போன்று கூடலூர் வெண்ணாற்றங்கரைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மீண்டும் சரவணனை தாக்கி கொலை செய்து, புதைத்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.  இதையடுத்து, ஆனந்த், நவநீதகிருஷ்ணன், நந்தகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT