பிப். 6 இல் திருவாரூரில் ஆர்ப்பாட்டம்: குடந்தை வணிகர்கள் பங்கேற்க முடிவு
திருவாரூரில் பிப். 6ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
திருவாரூரில் பிப். 6ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கும்பகோணம் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் மகேந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாஜக தலைமையிலான மத்திய அரசு, அந்நிய முதலீட்டை அனுமதித்து, அடுத்து படிப்படியாக அந்நிய நிறுவனங்களுக்கும் அனுமதியளிக்கும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சில்லறை வணிகம் முற்றிலும் அழிந்துவிடும்.
இதனால் சில்லறை வணிகத்தில் ஈடுபடும் கோடிக்கணக்கான வணிகர்களும், அவர்களைச் சார்ந்துள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் அழிந்துவிடும். வேலைவாய்ப்பு இல்லாமல் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடை வாடகையை முறைபடுத்த வேண்டும், சொத்து வரி விதிப்பு உயர்வு, நடப்பு நிதியாண்டிலிருந்து கணக்கீடு செய்ய வேண்டும். உணவகங்கள், கடைகளில் உருவாகும் குப்பை மறுசுழற்சிக்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மண்டல வாரியாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதே போல, தஞ்சை மண்டலம் திருவாரூரில் 6-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத்தினரும் பங்கேற்பர் எனத் தெரிவித்துள்ளனர்.