முகப்பு
தஞ்சாவூர்

பொம்மைச் செயல் திட்டத்தை கொடுத்திருக்கிறது மத்திய அரசு: காவிரி உரிமை மீட்புக் குழு

உச்ச நீதிமன்றத்தில் பொம்மைச் செயல்திட்டத்தை மத்திய அரசுக் கொடுத்திருக்கிறது என காவிரி உரிமை மீட்புக் குழுத் தெரிவித்துள்ளது

Updated On : 15 மே, 2018 at 4:06 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

உச்ச நீதிமன்றத்தில் பொம்மைச் செயல்திட்டத்தை மத்திய அரசுக் கொடுத்திருக்கிறது என காவிரி உரிமை மீட்புக் குழுத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
மத்திய அரசின் நீர்வளத்துறை திங்கள்கிழமை (மே 14) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் என்பது தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது.
காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் - 2018 என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு 9, செயல் திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதன் உட்பிரிவில், கேரளத்தின் பாணாசுர சாகர், கர்நாடகத்தின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டின் கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்துக்கு 10 நாள் கணக்கில், அந்தந்த மாநிலம் தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் கொடுக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் தன் பொறுப்பில் தண்ணீர் திறந்துவிடாது என்பதை இப்பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசுதான் இந்த ஆணையம் வந்த பிறகும் திறந்துவிடுமாம்.
ஒரு மேற்பார்வைப் பணியைத்தான் இந்த ஆணையம் செய்யும் என்பதை ஏற்கெனவே, இதற்கு முன் உள்ள பிரிவு (9)(2) உறுதி செய்கிறது. அடுத்து, பிரிவு (9)(14)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் மத்திய அரசிடம் முறையிடும் என்றும், அதில் மத்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.
1991, ஜூன் 25ஆம் தேதி காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மத்திய அரசுத் தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருகிறது என்பதை, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகமே அறியும். புதிய ஆணையத்தின் வழிகாட்டுதலை கர்நாடகம் ஏற்க மறுத்தால், மத்திய அரசிடம் புகார் செய்து தீர்வு காணலாம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்.
அடுத்து, பிரிவு (9)(18)-இல், மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் எல்லா வகை வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதைவிடக் கொடுமையாக இந்த ஆணையம், தனது பணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடலாம் என வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு 12 கூறுகிறது. காவிரித் தண்ணீரை மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையின்படி தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, சாகுபடிக்கும் குடிநீருக்கும் மீட்டர் வைத்து விற்பனை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தவும் இந்த ஆணையத்துக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது. எனவே, கர்நாடக மதகுகளை திறந்துவிடுகிற அதிகாரம் படைத்த செயல் திட்டத்தை மத்திய அரசு முன் வைக்க வேண்டும். இந்தப் பொம்மைத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.