சரசுவதி மகால் நூலகத்தில் மோடி எழுத்துப் பயிற்சி ஜூனில் தொடக்கம்
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் மோடி எழுத்துப் பயிற்சி ஜூன் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் மோடி எழுத்துப் பயிற்சி ஜூன் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியரும், நூலக இயக்குநருமான ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் ஜூன் மாதம் தொடங்கி 3 வார காலத்துக்கு மோடி எழுத்துப் பயிற்சியைப் பிற்பகலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நூலகத்தில் ஆயிரக்கணக்கான மோடி ஆவணக் கட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றைப் படித்தறிய மோடி எழுத்தின் பயிற்சியும், மராத்தி மொழியும் அவசியம். இதுபோன்ற எழுத்துகளின் இன்றியமையாமையைக் கருத்தில் கொண்டு, இந்நூலக வளர்ச்சித் திட்டப் பணி நிதியுதவியுடன் ஜூன் 3-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 21 நாள்கள் மோடி எழுத்துப் பயிற்சி வகுப்பு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகளுக்கு மோடி எழுத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்களும், இளங்கலை பட்டம் பெற்றவர்களும், மராத்தி வரலாறு, சம்ஸ்கிருதத்தில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் மோடி எழுத்தைப் படிக்க அறிந்து கொள்வதுடன், சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மோடி
ஆவணங்களையும் படித்து பிரதியாக்கம் செய்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தில் அல்லது வெள்ளைத் தாளில் தங்களது முகவரி, கல்வித் தகுதி, செல்லிடப்பேசி எண், மோடி எழுத்துப் பயிற்சி வகுப்பு எனத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் - 9 என்ற முகவரிக்கு மே 29-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.