தஞ்சாவூர்

சூடோமோனாஸ் பயன்படுத்தி நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்

 சூடோமோனாஸ் பயன்படுத்தி நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம் என்றார் மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி. 

DIN


 சூடோமோனாஸ் பயன்படுத்தி நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம் என்றார் மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
மதுக்கூர் ஒன்றியத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு நடவுப்பணிகள் நடந்து வருகின்றன.  இந்த ஒன்றியத்திலுள்ள மோகூர், கீழக்குறிச்சி, ஒலையக்குன்னம், வேப்பங்குளம், கோபாலசமுத்திரம், நெம்மேலி, பெரியக்கோட்டை ஆகிய கிராமங்களில் சுமார் 400 ஏக்கர் பரப்பில் ஆழ்குழாய் கிணற்று நீரை கொண்டு பாசனம் செய்து விவசாயிகள் நெல் சாகுபடியை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர். 
தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு எதிர் உயிர் பூஞ்சாணமான சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பயன்படுத்த வேண்டும் 
இது மண்ணின் மூலம் பரவும் நோய்களான வேர்அழுகல், வாடல் நோய், நாற்றழுகல், வேர்வீக்க நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன், இலை வழியாக பரவும் நோய்களான குலைநோய், இலையுறை கருகல் நோய்,  இலைப்புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது. நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் நெல்லின் இலைச்சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான் ஆகியவற்றால் ஏற்படும் வீரியத்தையும் குறைக்கிறது. தொடர்ந்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸின் ஜல்ப்ரலின் மற்றும் இன்டோல் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.
நெல் விதை நேர்த்தி செய்யும்போது 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடித்த பின், விதைகளை ஈர சாக்குகளில் வைத்து நிழலில் உலர்த்தி முளைக்கட்டி விதைக்க வேண்டும். அதேபோல, நாற்றுகளை நனைத்து பயன்படுத்தும்போது 1 கிலோ சூடோமோனஸ் கலவையை தண்ணீரில் கலந்து, 1 ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளைஅரைமணி நேரம் ஊற வைத்து பின்பு நட வேண்டும். 
அதிகநேரம் ஊற வைத்தால் அதன் செயல்திறன் கூடுதலாக இருக்கும். வயலில் நேரடியாக பயன்படுத்தும்போது 1 ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நாற்று நட்ட 30 நாள்கள் கழித்து இட வேண்டும். 
நெல்லில் தெளிப்பு முறையை கையாளும்போது சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவிகித கரைசலை (1லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில்) நடவு நட்ட 45 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.
சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை மற்ற ரசாயன பூச்சிக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் பயன்படுத்தக் கூடாது. இந்த பாக்டீரியா கலவையை தயாரித்த 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். மற்ற உயிர் உரங்களுடன் சூடோமோனாஸ் கலவையை பயன்படுத்தும்போது நோய்களை வெகுவாக கட்டுப்படுத்துகிறது. இந்த சிக்கனமான, எளிய முறையை கையாளும்போது, விதை மற்றும் மண் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பயிர்களின் நோய் எதிர்ப்புத் திறனைஅதிகரிப்பதுடன் மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்தி பயிர்களுக்கு நீண்ட காலப் பாதுகாப்பைத் தருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT