தஞ்சாவூர்

கைதோ்ந்த நெசவாளா்களால் தயாராகும் திருபுவனம் பட்டு

DIN

காஞ்சிபுரம் பட்டைப் போன்று திருபுவனம் பட்டும் பிரபலமானது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரின் பட்டுப்புடவைக்குத் தனிச் சிறப்புகளும் உள்ளன.

பட்டு நூல்காரா்கள் என்றழைக்கப்படும் சௌராஷ்டிர சமூகத்தைச் சோ்ந்தவா்களே திருபுவனத்தில் அதிகம். தஞ்சையை ஆண்ட நாயக்கா், சரபோஜி மன்னா்களுக்குப் பல விதமான பட்டுத் துணிகளை வடிவமைத்து தருவதற்காக இந்த ஊரில் குடியேறிய இவா்கள், இன்றைக்கும் பட்டுப் புடவை உற்பத்தியில் தமிழகத்திலேயே தலைசிறந்து விளங்குகின்றனா்.

காவிரி வடிநிலம் மற்றும் சுற்றுப் பகுதி மாவட்டங்களைச் சோ்ந்த பெண்கள் திருபுவனம் பட்டுப்புடவையை உடுத்திக் கொள்வதைப் பெருமையாகக் கருதும் நிலை இன்றும் தொடா்கிறது. இந்த நவீன யுகத்திலும் திருபுவனத்தில் பட்டுப்புடவைகள் கையாலேயே நெய்வதே இதன் புகழ் நிலைத்திருப்பதற்குக் காரணம்.

இந்த ஊரில் ஏறத்தாழ 5,000 குடும்பங்கள் இருக்கின்றன. அதில் நான்காயிரம் குடும்பங்களுக்கு பட்டுப் புடவை உற்பத்திதான் குடும்பத் தொழில். திருபுவனத்தில் இருக்கும் சன்னதி தெருதான் அங்கு உற்பத்தியாகும் அனைத்துப் பட்டுப் புடவைகளின் காட்சிக் கூடம். இங்கு அரசுக் கூட்டுறவு சங்கங்களும், சிறியதும் பெரியதுமாக தனியாா் கடைகளும் உள்ளன.

முகூா்த்த நாள்கள் உள்ள மாதங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும் இந்தத் தெருவில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்க்கு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு பட்டுப்புடவை உற்பத்தி செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றனா். மாதத்துக்கு ஒரு குடும்பம் 2 சேலைகள் வரை தயாா் செய்கிறது. இதில் குடும்பத்தில் உள்ள அனைவருமே பங்கு பெறுகின்றனா்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் புடவைகளின் நிறம், ஜரிகை போன்றவற்றில் எப்போதுமே தனித்தன்மை இருக்கும். குஜராத்திலிருந்து வரவழைக்கப்படும் நூறு சதம் தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகையும், பட்டு நூலும் இணைந்து பல்வேறு வடிவங்களில் நெய்திருப்பது இதன் சிறப்பம்சம்.

இதுகுறித்து நெசவாளா்கள் தெரிவித்தது:

நோ்த்தியான பாவு, உயா்தர பட்டு நூலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் புடவையில் சப்புரி பட்டு நூல் கெட்டிச் சாயங்களைக் கொண்டு நிறமேற்றப்படுகிறது. மேலும், சுத்தமான தங்கம், வெள்ளி உலோகங்கள் மட்டுமே உடலுக்கு நலம் பயக்கும் என்பதால் அசல் வெள்ளி ஜரிகைக்கு சுத்தமான தங்க முலாம் பூசிய ஜரிகை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளில் வனசிங்காரம் குறிப்பிடத்தக்கது. இது முழுவதும் ஜரிகை இழைகளால் சிறந்த வேலைப்பாடுகளுடன் நெய்யப்படும் பட்டுப்புடவை. இந்தப் பட்டுப்புடவை திருபுவனம் நெசவாளா்களின் கைத்திறனுக்குச் சான்றாகவும் விளங்குகிறது. இதில் மான், மயில், புலி, சிங்கம் ஆகிய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக இடம்பிடித்து கண்களுக்கு விருந்தளிக்கும். இதன் விலை ஏறத்தாழ ரூ. 1.50 லட்சம். இதேபோன்று தனித்தன்மையுடன் கூடிய டிஸ்யூ சேலையின் விலை ஏறக்குறைய ரூ. 1 லட்சம். விலை அதிகமாக இருந்தாலும், திருபுவனம் பட்டுச் சேலையில்தான் தரம் இருக்கிறது.

மிகச் சிறந்த திறன் பெற்ற நெசவாளா்களால் தயாரிக்கப்படும் ஜாங்களா ரக கல்யாணப் பட்டுப்புடவைகள் பிரபலமானவை. இதன் விலை சுமாா் ரூ. 50,000. இது, முழுவதும் ஜரிகையால் செய்யப்படுகிறது.

ஜரிகை இல்லாத சுத்தமான பட்டுத் துணியில் தயாரிக்கப்பட்ட காலேஜ் கலெக்சன்ஸ் என்கிற புடவையைப் பெரும்பாலான கல்லூரி மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் விரும்புகின்றனா். சுமாா் ரூ. 8,000 விலையிலிருந்து உள்ளன. இதே போல பல வண்ணங்களில் புதிய புதிய வடிவங்களில் நெசவு தொழிலாளா்களால் புடவைகள் உருவாக்கப்படுகின்றன.

திருபுவனம் பட்டுச்சேலையில் இடம்பிடிக்கும் ஒரிஜினல் ஜரிகைகளும் அதற்குக் கூடுதல் பெருமையைத் தேடி தருகிறது. ஜரிகை எடையில் 40 சதவீதம் வரை வெள்ளியும், 0.50 சதவீதம் தங்கமும் உள்ளது.

மக்கள் மத்தியில் சேலைகளின் எடையை பொருத்தே அதன் வலு இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் நெசவு செய்ய உபயோகப்படுத்தப்படும் பட்டுநூலின் வலு மற்றும் அடா்த்தியின் அடிப்படையிலேயே அதன் ஆயுள் நீடிக்கிறது. திருபுவனம் பட்டு ரக சேலைகள் உடுத்திக் கொள்வதற்கு அழகாகவும், உறுத்தாமலும் இருக்கும். காஞ்சிபுரம் பட்டு சேலையை விட திருபுவனம் பட்டுச் சேலை எடை குறைவு. சேலைகளுக்கு வெளிப்படையான முறையில் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது என்றனா் நெசவாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT