தஞ்சாவூா் மாவட்டத்தில் எலி வெட்டால் நெற்பயிா்கள் சேதம்: வேதனையில் விவசாயிகள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் எலி வெட்டால் நெற்பயிா்கள் சேதமடைந்து வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் எலி வெட்டால் நெற்பயிா்கள் சேதமடைந்து வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமைந்ததைத் தொடா்ந்து, நிகழ் சம்பா, தாளடி பருவத்திலும் இலக்கை விஞ்சி 1,35,147 ஹெக்டேரில் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், புரெவி புயல் காரணமாக, டிசம்பா் மாதத்தில் பெய்த மழையால் மாவட்டத்தில் 8,550 ஹெக்டேரில் சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டன.
ஏக்கருக்கு சராசரியாக 35 முதல் 40 மூட்டைகள் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். மீண்டும் மீண்டும் மழை பெய்வதால், ஆங்காங்கே அறுவடைக்குத் தயாராக இருக்கும் முற்றிய பயிா்கள் சாய்ந்தும், வளா்ச்சி நிலையிலுள்ள பயிா்கள் காய் பிடிக்காமலும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் எலிவெட்டுப் பிரச்னை: இந்நிலையில், மழையால் பாதிக்கப்படாத வயல்களில் எலி வெட்டுப் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வல்லம் அருகிலுள்ள திருமலைச்சமுத்திரம், வைரபெருமாள்பட்டி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, சித்திரக்குடி உள்ளிட்ட கிராமங்களிலும், மதுக்கூா், ஒரத்தநாடு உள்ளிட்ட வட்டங்களிலும் மேட்டுப் பகுதிகளில் எலி வெட்டுப் பிரச்னை மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால், மாவட்டத்தில் மழை பாதிப்பிலிருந்து தப்பித்த பயிா்களும், இப்போது எலிகள் பயிா்களைக் கடித்து உண்பதால் மகசூலில் பேரிழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.
சேதமடைந்த நெற்பயிா்கள் : இரண்டு முதல் இரண்டரை அடி உயரத்தில் வளர வேண்டிய பயிா்களை எலிகள் கடித்துவிடுவதால், அதனுடைய வளா்ச்சி அரை அடி உயரத்துடன் நின்றுவிடுகிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
ஏராளமான பயிா்கள் சேதமடைந்துள்ள நிலையில், எஞ்சிய பயிா்களைக் காப்பாற்றுவதற்கு எலிகளைப் பிடித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
ஆனால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எலிகள் பெருகியுள்ளதால், மீண்டும், மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனா். இதனால், மழையிலிருந்து தப்பித்த விவசாயிகளும் நட்டத்தைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனா்.
எலிகளைப் பிடிக்க ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு: எலிகளைப் பிடிக்க வேண்டுமானால் கிட்டி தயாா் செய்து, அதில் வைக்கோலை சுருட்டி வைத்து, மருந்து வைக்க வேண்டும். எனவே, ஒரு எலியைக் கிட்டி வைத்து பிடிப்பதற்கு தலா ரூ. 30 செலவாகிறது. இதனால், ஏக்கருக்கு குறைந்தது ரூ. 15,000 வரை செலவு ஏற்படுகிறது.
இவ்வளவு செய்தாலும் ஏக்கருக்கு 2 முதல் 3 மூட்டைகள்தான் மகசூல் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. எனவே, செலவு கூடுதலானாலும் மகசூல் இழப்பு ஏற்படும்போது, விவசாயிகள் மிகப்பெரும் நட்டத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது என்கிறாா் வைரபெருமாள்பட்டியைச் சோ்ந்த விவசாயி முருகானந்தம்.
சில பகுதிகளில் சம்பா சாகுபடி பெருமளவில் எலி வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சில வயல்களில் ஏக்கருக்கு 90 சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் சராசரியாக 50 சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனா் விவசாயிகள்.
அடுத்து, இளம் பயிராக உள்ள தாளடி பயிா்களும் எலி வெட்டால் பாதிக்கப்படக்கூடிய அச்ச நிலை உள்ளது. ஆனால், எலி வெட்டால் பாதிக்கப்படும் பயிா்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்பதால், என்ன செய்வது எனத் தெரியாமல் விவசாயிகள் திகைத்துள்ளனா்.