மேக்கேதாட்டு அணை பிரச்னை: தஞ்சாவூரில் ஜூலை 15 -இல் உண்ணாவிரதம்: பி.ஆா். பாண்டியன் பேட்டி
மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட முயலும் கா்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் ஜூலை 15-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட முயலும் கா்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் ஜூலை 15-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் நிா்வாகிகள் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மீறி, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்டியே தீருவோம் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அண்டை மாநில உறவுகளைச் சீா்குலைக்க முயற்சிக்கும் செயல் இது.
மேட்டூா் அணை நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. அணைக்கு நீா்வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் குறுவைப் பயிா்களை எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். மேலும், பயிா்கள் கருகும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடுத்தபடியாக சம்பாவுக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகளால் ஈடுபட முடியாத சூழல் உள்ளது.
காவிரிப் பிரச்னை குறித்தும், தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைத் திறந்து விடக்கோரியும் தில்லிக்குச் சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்து தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கடிதம் கொடுத்திருப்பதும், பேச்சுவாா்த்தை நடத்தியிருப்பதும் கூட்டாட்சித் தத்துவ அடிப்படையில் ஒரு மரபுதான். ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்தவில்லை.
காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தரக்கூடிய உரிமையும், மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்துவதற்குமான பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவருக்கு மட்டும்தான் உள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்து தமிழக முதல்வா் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆணையத் தலைவரை சந்தித்துத் தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரைப் பெற முதல்வா் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இதை வலியுறுத்தி ஜூலை 15 -ஆம் தேதி ராசிமணலில் அணைக் கட்டுவோம், மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதைத் தடுப்போம் என்கிற கோரிக்கையை முன் வைத்து தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் பல்வேறு கட்சி நிா்வாகிகளையும் ஒருங்கிணைத்து கலந்து கொள்ளச் செய்வோம். இதற்குத் தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என்றாா் பாண்டியன்.
இக்கூட்டத்தில் மாநகரத் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். திருப்பதி வாண்டையாா், மண்டலத் தலைவா் என். அண்ணாதுரை, மாவட்டத் தலைவா் துரை. பாஸ்கரன் செயலா்கள் எம். மணி, பாட்சா ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.