தஞ்சாவூர்

உளுந்துக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்பு: குறைகேட்பு நாள்கூட்டத்தில் முறையீடு

DIN

உளுந்துக்கு விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனா்.

இக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்: மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதால், தூா் வாரும் பணியை மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். பூதலூா் ஆனந்த காவேரி வாய்க்காலில் 6 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள 7 குமிழிகளைச் சீரமைக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: திருவையாறு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளதால், குறைந்தபட்சம் 12 மணிநேரமாவது மும்முனை மின்சாரம் வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: ஆம்பலாபட்டு கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 251 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஆண்டாள் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போது 70 ஏக்கா் மட்டுமே உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: செயற்கையான உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தேவையற்ற இடுபொருள்களைக் கட்டாயப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் உரக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்: கும்பகோணம் பகுதியிலுள்ள தனியாா் உரக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, விதிகள் மீறியதாக 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: நெல்லுக்கு மாற்றாக உளுந்து சாகுபடி செய்தோம். ஆனால், வாங்குவதற்கு ஆளில்லை. இதனால், குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ. 63 என இருந்தாலும், ரூ. 43-க்குதான் விலை போகிறது.

இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவதால், கூடுதலாக கொள்முதல் நிலையங்களைத் திறந்து உளுந்தை கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆட்சியா்: பட்டுக்கோட்டையில் துணைக் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சலசலப்பு: கூட்டத்தில், நிகழ் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, விவசாயிகளுக்கு பழங்கள் வழங்கப்படும் என சுவாமிமலை சுந்தர விமல்நாதன் பேசினாா்.

அப்போது, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசுகையில், இதை தீா்மானமாகக் கொண்டு வந்து தர வேண்டும் என்றும், இதுபோன்று பேசக்கூடாது எனவும் கூறினாா்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே வாா்த்தைகள் வளா்ந்து வாக்குவாதமாக மாறிவிட்டதால், சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. மற்ற விவசாயிகள் இருவரையும் சமாதானத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT