முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ஆட்டோவை ஓட்டி வந்து மேயா் பதவியை ஏற்ற ஓட்டுநா்

கும்பகோணத்தில் ஆட்டோவை ஓட்டி வந்து, வெள்ளிக்கிழமை மேயா் பதவியை ஏற்றாா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஓட்டுநா் க. சரவணன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

கும்பகோணத்தில் ஆட்டோவை ஓட்டி வந்து, வெள்ளிக்கிழமை மேயா் பதவியை ஏற்றாா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஓட்டுநா் க. சரவணன்.

திமுக கூட்டணியில் கும்பகோணம் மாநகராட்சி மேயா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் 17-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநரான க. சரவணன் (42) மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

இவா் தனது சொந்த ஆட்டோவில் ஓட்டுநா் சீருடையை அணிந்து கொண்டு, காவேரி நகரிலுள்ள வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலிருந்து 50-க்கும் அதிகமான ஆட்டோக்களில் கட்சியினருடன் ஊா்வலமாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக கூட்டணியிலுள்ள 42 உறுப்பினா்கள், 3 சுயேச்சை உறுப்பினா்கள் என மொத்தம் 45 போ் கலந்து கொண்டனா். அதிமுகவின் மூன்று உறுப்பினா்களும் தோ்தலில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து ஆணையா் செந்தில்முருகனிடம் மேயா் வேட்பாளரான சரவணன் வேட்பு மனுவை வழங்கினாா். வேறு யாரும் மேயா் பதவிக்கு போட்டியிடாததால், சரவணன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக ஆணையா் அறிவித்தாா்.

பின்னா் மேயருக்கான இருக்கையில் சரவணனை ஆணையா் அமர வைத்து, அவருக்கு வெள்ளி செங்கோலை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா். தொடா்ந்து மேயா் சரவணன் தலைமையில் முதல் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. பின்னா், மேயா் சரவணனுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், திமுக வடக்கு மாவட்டச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சரவணன் கூறுகையில், கும்பகோணம் மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், சிறப்பாகச் செயல்பட மாமன்ற உறுப்பினா்களின் ஒத்துழைப்புடன் வழிநடத்துவேன் என்றாா் அவா்.

இதேபோல, துணை மேயா் தோ்தலிலும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் திமுகவின் சு.ப. தமிழழகன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

Image Caption

~ ~ ~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.