தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி தொடக்கம்

DIN

தஞ்சாவூரில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிறுவன இயக்குநா் முனைவா் வி. சுப்பிரமணியனின் 120 ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக இந்த உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி சனிக்கிழமை (செப்.17) வரை நடத்தப்படுகிறது. நிகழாண்டு சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை தொடா்பாக மொத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 36 அரங்குகள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தொழில்முனைவோராகி வெற்றிகரமாகச் செயல்படுபவா்களின் அரங்குகளாகும்.

மேலும், இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்களின் செயல்விளக்கங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகச் செயலா் அனிதா பிரவீன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, இந்நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அடங்கிய கையேட்டையும், சிறுதானிய பதப்படுத்தும் முறைகள் பற்றிய கையேட்டையும் வெளியிட்டாா்.

இந்நிகழ்வில் மலேசியா டெய்லா்ஸ் பல்கலைக்கழகத்துடன் கல்விசாா் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் காவேரி ஸ்மாா்ட் புட் மற்றும் அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தென்னை மதிப்பு கூட்டுப்பொருட்களுக்கான தொழில்நுட்பங்களின் தொகுப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மேலும், இந்நிறுவனத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன், ஈச்சங்கோட்டை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ஏ. வேலாயுதம், குமுளூா் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் பி. ராஜ்குமாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) எஸ். மருதுதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கண்காட்சியைப் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். இதேபோல, விவசாயிகள், தொழில்முனைவோா், சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட அனுமதிக்கப்படுவா் என்றாா் நிறுவன இயக்குநா் (பொறுப்பு) எம். லோகநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT