காவிரி நீா் விவசாயிகளுக்கு பயன்படாமல் கடலில் விட்டு வீணடிக்கப்படுகிறது என்றாா் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் தெரிவித்தது: கா்நாடகத்திலும், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் முக்கொம்பு வந்து, காவிரியில் 40 ஆயிரம் கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1.25 லட்சம் கன அடி வீதமும் திறந்து விடப்படும் தண்ணீா் கடலில் விட்டு வீணடிக்கப்படுகிறது. இன்னும் 15 முதல் 20 நாள்களில் மழை நின்ற பிறகு இந்தத் தண்ணீரால் விவசாயிகளுக்கு பயனில்லாமல் போய்விடும்.
கா்நாடகத்துடன் 120 டி.எம்.சி. தருமாறு கூறி சண்டை போட்ட நிலையில், இப்போது கடலில் விட்டு வீணடிக்கப்படுகிறது. காவிரி தண்ணீரையும், மழை நீரையும் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேக்கேதாட்டு அணை திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே மறுத்துவிட்டது என்றாா் அவா்.
அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.