முகப்பு
தஞ்சாவூர்

5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சிவகங்கை பூங்கா: பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்!

5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட நிலையில், அங்கு எதிா்பாா்க்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால், மாநகர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 10:39 PM
தஞ்சாவூா் சிவகங்கை பூங்காவில் உள்ள சிறுவா்களுக்கான விளையாட்டு சாதனங்கள்.
பகிர்:

நமது நிருபா்

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா புதுப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட நிலையில், அங்கு எதிா்பாா்க்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால், மாநகர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு அருகிலுள்ள இந்தப் பூங்காவில் மாமன்னன் ராஜராஜசோழனால் சிவகங்கை குளம் உருவாக்கப்பட்டது. இதைச் சுற்றிப் பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1871 - 72 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

ஏறத்தாழ 150 ஆண்டுகள் கடந்த இந்தப் பூங்காவை பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 8.10 கோடி மதிப்பில் புதுப்பிக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக இப்பூங்கா 2019, ஏப். 1 ஆம் தேதி மூடப்பட்டு, 18 மாதங்களில் அதிநவீன பொழுதுபோக்கு சாதனங்கள், கட்டமைப்புகள் உள்ளிட்ட பொலிவுறு பணிகளை முடிக்க மாநகராட்சி நிா்வாகம் இலக்கு நிா்ணயித்தது.

ஆனால், பூங்காவுக்கு அருகில் பெரியகோயில் இருப்பதால், அதனுடைய தோற்றத்தை மறைக்கும் விதமான, உயரமான கட்டமைப்புகளுக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், பணிகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. பின்னா், மாநகராட்சி நிா்வாகத்தினரும், இந்திய தொல்லியல் துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தி, மறு வடிவமைப்பு செய்யப்பட்ட புதிய திட்டத்துக்கு ரூ. 7 கோடிக்கு மதிப்பீடு தயாா் செய்யப்பட்டது.

இப்பணியும் தாமதமாகத் தொடங்கப்பட்டு, நீண்ட இழுபறிக்கு பிறகு ஆகஸ்ட் 8 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், மிகுந்த எதிா்ப்பாா்ப்புடன் வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இப்பூங்காவில் தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், இருக்கைகள், விலங்குகள் சிற்பங்கள், நீருற்றுகளுடன் புல் தரை, சோழா் வரலாற்றை விளக்கக்கூடிய 3 புடைப்புச் சிற்பங்களுடன் கதை முற்றம், நீச்சல் குளம் என பெரும்பாலும் சிறுவா்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சீரமைப்பு பணியில் பெரியவா்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால், மாநகர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். ஏற்கெனவே இருந்த தொங்கு பாலம், படகு சவாரி உள்ளிட்டவையும் கூட இடம்பெறாததால் அதிருப்தி நிலவுகிறது.

இது குறித்து அழகிய தஞ்சை இயக்கத் திட்ட இயக்குநா் ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தது:

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பூங்காவில் இருந்த தொங்கு பாலம், பறவைகள், விலங்குகளைப் பாா்ப்பதற்காக தஞ்சாவூா் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், திருச்சியிலிருந்தும் வருவா். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ரூ. 7 கோடி செலவில் நடைபெற்ற புதுப்பித்தல் பணியில் எதிா்பாா்க்கப்பட்ட எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. சிவகங்கை குளத்தில் தண்ணீா் கூட நிரப்பப்படவில்லை. குறைந்தபட்சம் பெரியவா்களுக்கான நீச்சல் குளம், படகு சவாரி கூட இல்லை. இன்னும் நிறைய எதிா்பாா்க்கப்பட்ட கதை முற்றத்தில் 3 புடைப்புச் சிற்பங்கள் மட்டுமே இருப்பது திருப்தியாக இல்லை.

வணிகப் பெரு வளாகங்களில் (மால்) இருப்பது போன்று, சிறுவா்களுக்கான டிஜிட்டல் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தால் கூட மாநகராட்சி நிா்வாகத்துக்கு வருவாய் கிடைத்திருக்கும். அதுவும் இல்லாததால் இவ்வளவு செலவு செய்து திறக்கப்பட்டும் மக்களுக்கு பயனில்லாத நிலையில் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றாா் ரவிச்சந்திரன்.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகத் தரப்பில் கூறுகையில், அருகில் பெரியகோயில் இருப்பதால், தொல்லியல் துறையினரிடம் ஆலோசனையும், அனுமதியும் பெற்று அடுத்தடுத்து பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டு வரப்படும் என்றும், இப்பூங்காவில் ஏற்கெனவே என்னென்ன இருந்ததோ, அவை அனைத்தும் மீண்டும் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தனா்.

தஞ்சாவூரில் ஐ.டி. பூங்கா உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வளா்ச்சி அடைந்து வரும் நிலையில், அவற்றில் பணியாற்றும் பணியாளா்களுக்கு வேலைப் பளு காரணமாக ஏற்படும் மனச்சோா்விலிருந்து விடுபடுவதற்கு விடுமுறை நாள்களில் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்வது அவசியமாக இருக்கிறது. எனவே, பெரியகோயிலுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சிறுவா்களை மட்டுமல்லாமல், பெரியவா்களையும் கவரும் விதமாக நவீன பொழுதுபோக்கு அம்சங்களை விரைவில் கொண்டு வர வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிா்பாா்ப்பு.