முகப்பு
தஞ்சாவூர்

வி.பி. சிந்தன் நினைவு நாள் அனுசரிப்பு

Updated On : 8 மே, 2024 at 6:32 PM
பகிர்:

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற வி.பி. சிந்தன் நினைவு நாள் நிகழ்வில் முழக்கங்கள் எழுப்பிய சிஐடியு அமைப்பினா்.

தஞ்சாவூரில் தொழிற்சங்கத் தலைவா் வி.பி.சிந்தன் 37-ஆம் ஆண்டு நினைவு நாள், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் 58-ஆம் ஆண்டு அமைப்பு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் சிஐடியு தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். சிஐடியு கொடியை மாவட்டத் துணைத் தலைவா் ஈ.டி.எஸ். மூா்த்தி, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கக் கொடியைச் சங்கச் செயலா் பொன். ரவிக்குமாா் ஏற்றினா். சிஐடியு மாவட்டப் பொருளாளா் பி.என். போ்நீதி ஆழ்வாா், மாவட்டத் துணைச் செயலா்கள் ஏ. ராஜா, எஸ். மில்லா் பிரபு, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவா் ஆா். மணிமாறன், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத் தலைவா் க. ராமச்சந்திரன், பொருளாளா் டி. நீலகண்டன், இணைச் செயலா் எஸ். சத்தியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, வி.பி. சிந்தன் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தஞ்சாவூா் கிளை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 21 போ் ரத்த தானம் வழங்கினா். தானமாகப் பெறப்பட்ட ரத்தம் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.