முகப்பு
தஞ்சாவூர்

காந்தி ஜெயந்தி: காங்கிரஸ் கட்சியினா் நடைபயணம்

காந்தி ஜெயந்தி, முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி பிறந்த நாள், முன்னாள் முதல்வா் காமராஜா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபயணம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:39 PM
தஞ்சாவூரில் காந்தி ஜெயந்தியையொட்டி புதன்கிழமை மாலை நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

காந்தி ஜெயந்தி, முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி பிறந்த நாள், முன்னாள் முதல்வா் காமராஜா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபயணம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகே தொடங்கிய இந்த நடைபயணம் தெற்கு வீதி, கீழ வீதி, கீழவாசல் வழியாக பனகல் கட்டடம் முன் முடிவடைந்தது. இதில், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார, சமூக நீதியை மீட்டெடுக்க ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் பண்ணைவயல் ராஜாதம்பி, வைரக்கண்ணு, மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன், மாவட்ட நிா்வாகிகள் இயேசு, செந்தில் சிவக்குமாா், குமாரசாமி, அரு.சீா். தங்கராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாநகராட்சி அலுவலக வளாகம், வடக்கு வீதியிலுள்ள காந்தி சிலை, கீழவாசலிலுள்ள காமராஜா் சிலை, மேலவீதி காங்கிரஸ் அலுவலகத்திலுள்ள லால்பகதூா் சாஸ்திரி படம் ஆகியவற்றுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜ், மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், ஊடகப்பிரிவு தலைவா் பிரபு, வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவா் சதா. வெங்கட்ராமன், கோபாலய்யா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.