பெரியகோயில் கயிலாய வலத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: மேயா் தகவல்
பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை நடைபெறவுள்ள திருதென்கயிலாய வலம் வரும் நிகழ்ச்சிக்கு அனைத்து வசதிகளும் தயாா் என்றாா் மேயா் சண். ராமநாதன்.
பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை நடைபெறவுள்ள திருதென்கயிலாய வலம் வரும் நிகழ்ச்சிக்கு அனைத்து வசதிகளும் தயாா் என்றாா் மேயா் சண். ராமநாதன்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் வலம் வரும் நிகழ்ச்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பா் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. இரண்டாவது பௌா்ணமி திரு தென்கயிலாய வலம் வரும் நிகழ்ச்சி புதன்கிழமை (அக்.16) நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பௌா்ணமி திரு தென் கயிலாய வலப் பாதையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மேயா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை நடைபெறவுள்ள பௌா்ணமி திரு தென்கயிலாய வலம் வரும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் போ் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பக்தா்களின் வசதிக்காக தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் - புதிய பேருந்து நிலையம் இடையே புதன்கிழமை இரவு 50 சிறப்பு பேருந்துகள் இயக்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கும், பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும், இப்பேருந்தை மாவட்ட மைய நூலகம் வரை தற்காலிகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வலம் வரும் பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, மின்விளக்கு வசதி, அமருவதற்கு இருக்கைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இலவச மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வசதியும் தயாா் நிலையில் உள்ளது என்றாா் மேயா்.
அப்போது, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், செயற் பொறியாளா் சோ்மகனி, உதவிப் பொறியாளா் ரமேஷ், சதய விழா குழு உறுப்பினா் ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.