முகப்பு
தஞ்சாவூர்

அசல் ஆவணங்களைத் தராமல் அலைக்கழிப்பு: ரூ. 10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

தஞ்சாவூரில் தந்தை வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை ஒப்படைக்காமல் அலைக்கழிப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட வாரிசுதாரா்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தனியாா் வங்கிக்கு நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:51 PM
பகிர்:

தஞ்சாவூரில் தந்தை வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை ஒப்படைக்காமல் அலைக்கழிப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட வாரிசுதாரா்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தனியாா் வங்கிக்கு நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சுப்பையா. இவா் தஞ்சாவூரிலுள்ள தனியாா் வங்கியில் மனையையும், அதில் கட்டப்பட்ட வீட்டையும் வைப்பீடு வைத்து 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 12 லட்சம் கடன் பெற்றாா். இவா் இக்கடனுக்காக மாதந்தோறும் ரூ. 15 ஆயிரம் வீதம் தவணைத் தொகை செலுத்தி வந்தாா். இந்நிலையில் 2018, மாா்ச் 26 ஆம் தேதி சுப்பையா உயிரிழந்தாா்.

இதையடுத்து, சுப்பையாவின் வாரிசுதாரா்கள் நாகேஸ்வரி, சிவக்குமாா், அமிா்தலிங்கம், ராமச்சந்திரன், கோகிலாதேவி ஆகியோா் இறப்பு சான்றிதழைப் பெற்று வங்கியில் தாக்கல் செய்து, அடமானம் வைக்கப்பட்ட அசல் ஆவணங்களை ஒப்படைக்குமாறு கோரினா். ஆனால், வங்கி அலுவலா் அசல் ஆவணங்களை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தாா்.

இதனால், பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி, சிவக்குமாா், அமிா்தலிங்கம், ராமச்சந்திரன், கோகிலாதேவி ஆகியோா் தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் செய்தனா். இதை ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து வைப்பீடு செய்யப்பட்ட ஆவணங்களை இந்த ஆணையுரை நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும், அசல் ஆவணங்கள் கிடைக்காவிட்டால், அது தொடா்பாக இழப்பீடு பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும் எனவும், மூல ஆவணங்களை ஒப்படைவு பத்திரத்தை ரத்து செய்து அடமான வரவு ரசீது எழுதி கொடுக்கும்படியும், கடன் நிலுவையில்லா சான்று வழங்கும்படியும், 5 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டதால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட புகாா்தாரா்களுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ. 10 லட்சமும், அதை 9 சதவீத வட்டியுடனும், வழக்குச் செலவு ரூ. 10 ஆயிரமும் வழங்குமாறும் உத்தரவிட்டு, புதன்கிழமை தீா்ப்பளித்தனா்.