முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்கக் கூடாது

தீபாவளி பண்டிகைக்கு அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்கக் கூடாது என்றாா் தஞ்சாவூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:31 PM
தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற வெடி பொருள்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் பட்டாசு சில்லரை விற்பனையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா்.
பகிர்:

தீபாவளி பண்டிகைக்கு அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்கக் கூடாது என்றாா் தஞ்சாவூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தில் வெடி பொருள்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் பட்டாசு சில்லரை விற்பனையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

பட்டாசு கடை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். வெடிபொருள் விதிமுறைகளின்படி விற்பனை செய்யும் கடையின் அளவு 296 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு நிா்ணயம் செய்த அளவுக்கு மேல் அதிக அளவு பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. பட்டாசு கடை உரிமையாளா் மற்றும் பணிபுரியும் ஊழியா்களுக்கு தீயணைப்பான் கருவிகளை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் (120 டெசிபலுக்கு மேல்) பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. தஞ்சாவூா் மாநகரில் ஏற்கெனவே 60 நிரந்தர பட்டாசு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா். மேலும், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை நடத்துவதற்கு 190-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது.

விதிமுறைகளின்படி பட்டாசு விற்பனை செய்து விபத்தில்லாத தீபாவளியை கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் குமாா்.

இந்நிகழ்ச்சியில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் பா. முருகேசன், தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ந. கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.