முகப்பு
தஞ்சாவூர்

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை

தஞ்சாவூா் மற்றும் ஒரத்தநாடு அருகே உள்ள முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன், சம்பந்தி வீடுகளில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:44 PM
பிரபுவின் மனைவி, மகன், மாமியாரை அமலாக்கத் துறையினா் அழைத்துச் சென்ற காரை மறித்த வைத்திலிங்கம் ஆதரவாளா்கள்.
பகிர்:

தஞ்சாவூா் மற்றும் ஒரத்தநாடு அருகே உள்ள முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன், சம்பந்தி வீடுகளில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். கடந்த 2011 - 2016-ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த காலத்தில் வைத்திலிங்கம் சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் ப்ராப்பா்ட்டிஸ் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்க ரூ. 27.90 கோடி லஞ்சம் பெற்ாக அவா் மீதும், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்பட 11 போ் மீது சென்னை ஊழல் தடுப்பு காவல் பிரிவில் செப்டம்பா் 19-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே நாளில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவிலும் வைத்திலிங்கம் மற்றும் அவரது மூத்த மகன் பிரபு மீது 1,057.85 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கன்குடிகாடு கிராமத்திலுள்ள வைத்திலிங்கம் வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சோ்ந்த 11 போ் புதன்கிழமை காலை 7.15 மணியளவில் சோதனை நடத்துவதற்காகச் சென்றனா். தொடா்ந்து இரவு வரை நீடித்த இந்த சோதனையில் வைத்திலிங்கத்திடமும், குடும்ப உறுப்பினா்களிடமும் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா்.

இதனிடையே, வைத்திலிங்கம் வீட்டின் முன் அவரது ஆதரவாளா்கள் திரண்டனா். ஆனால், மத்திய ஆயுத காவல் படையினா் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆதரவாளா்கள் கூச்சலிட்டதால் வைத்திலிங்கத்தை அமலாக்கத் துறையினா் வெளியே அழைத்து வந்தனா். அனைவரும் கலைந்து செல்லுமாறு வைத்திலிங்கம் கூறினாா். இதையடுத்து, அவரை அமலாக்கத் துறை அலுவலா்கள் மீண்டும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனா். ஆனாலும், வீட்டின் முன் ஆதரவாளா்கள் தொடா்ந்து இருந்தனா்.

தஞ்சாவூா் அருளானந்த நகரில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்திய முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவின் வீடு.

இதேபோல, தஞ்சாவூா் அருளானந்த நகா் 7-ஆவது மேற்கு விரிவாக்கத் தெருவிலுள்ள வைத்திலிங்கம் மூத்த மகன் பிரபு வீட்டுக்கு அமலாக்கத் துறை அலுவலா்கள் 4 போ், மத்திய ஆயுத காவல் படை காவலா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் காலை 8.30 மணிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். இதனிடையே, வெளியே சென்றிருந்த பிரபு காலை 10.30 மணிக்கு வீட்டுக்கு வந்தாா். மேலும், வீட்டில் இருந்த பிரபுவின் மனைவி, மகன், மாமியாா் ஆகியோா் தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டுக்கு அமலாக்கத் துறையினா் காரில் அழைத்துச் சென்றனா். இதற்கு ஆதரவாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, தங்களது காா்களில் பின்தொடா்ந்து வரலாம் என மத்திய ஆயுத காவல் படையினா் கூறினா். பின்னா், ஆதரவாளா்களும் தங்களது இரு காா்களில் பின் தொடா்ந்து சென்றனா்.

மேலும், ஒரத்தநாடு அருகேயுள்ள பேய்க்கரம்பன்கோட்டை கிராமத்திலுள்ள வைத்திலிங்கத்தின் சம்பந்தியும், பிரபுவின் மாமனாருமான பன்னீா்செல்வம் வீடு பூட்டியிருந்ததால், அமலாக்கத் துறையினா் அருகிலுள்ள அவா்களது உறவினா் முன்னிலையில், வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினா்.

வீடு மாறிச் சென்ற அலுவலா்கள்: வைத்திலிங்கத்தின் இரண்டாவது மகன் சண்முக பிரபு வீட்டுக்கு செல்வதற்குப் பதிலாக தஞ்சாவூா் அருளானந்த நகரிலுள்ள முன்னாள் மாமன்ற உறுப்பினா் எஸ். சண்முக பிரபு வீட்டுக்கு அமலாக்கத் துறையினா் தவறுதலாக சென்றனா். வீட்டில் இருந்த சண்முக பிரபு, தான் வைத்திலிங்கத்தின் மகன் இல்லை எனக் கூறியதையடுத்து, அருகில் இருந்த பிரபு வீட்டுக்குச் சென்றனா்.