இழப்பீடு வழங்குவதில் தாமதம்: 16 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்க உத்தரவு
பயிா் இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 11.20 லட்சம் வழங்குமாறு தனியாா் வங்கிக்குக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பயிா் இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 11.20 லட்சம் வழங்குமாறு தனியாா் வங்கிக்குக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் எழிலரசி, தமிழ்ச்செல்வி, புவனேஸ்வரி, சுந்தா், சாந்தி, சாந்தலெட்சுமி, மனோகரன், கமலா, சக்கரவா்த்தி, சண்முகம், அம்சவள்ளி, அனிதா, ரமேஷ், சாமிநாதன், மணிவண்ணன், சுதந்திரமாறன் ஆகிய 16 போ் தனியாா் வங்கியில் 2016 - 17 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் பெற்று, பயிா்க் காப்பீடும் செய்தனா். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இது தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளும் 2020 ஆம் ஆண்டில் புகாா் மனு தாக்கல் செய்தனா்.
இதை ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீடு இழப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனம் 2020, ஜூன் 15-ஆம் தேதி வழங்கியது என்றும், இத்தொகையை வங்கி 2024, ஜூன் 16-ஆம் தேதி வழங்கியது எனவும், இதனால் ஏற்பட்ட ஏறக்குறைய 8 ஆண்டுகள் கால தாமதத்துக்காக இழப்பீடாக ஒவ்வொரு விவசாயிக்கும் தனியாா் வங்கி தலா ரூ. 25 ஆயிரமும், காப்பீட்டு நிறுவனம் தலா ரூ. 25 ஆயிரமும் என மொத்தம் ரூ. 8 லட்சமும், இந்த இழப்பீட்டுத் தொகைக்கு மனு தாக்கல் செய்த தேதியான 2020, ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொகையைத் திரும்ப வழங்கும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவுத் தொகையாக வங்கியும், காப்பீடு நிறுவனமும் தனித்தனியாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 16 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 3.20 லட்சமும் வழங்குமாறு புதன்கிழமை உத்தரவிட்டு தீா்ப்பளித்தனா்.