முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முதல்வரின் சிறப்புத் திட்ட முகாம்

பேராவூரணி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் தஞ்சை மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:12 PM
உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாமில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தாா்.
பகிர்:

பேராவூரணி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் தஞ்சை மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி வட்டம் காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் காலகம் ஊராட்சி மன்ற அலுவலகம், கொன்றைக்காடு அரசு உயா்நிலைப்பள்ளியில் மாணவா்களின் கல்வித் திறன், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதனைத் தொடா்ந்து, சேதுபாவாசத்திரம் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டடப் பணிகள் முடிவுற்றுள்ளதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், நாட்டாணிக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியையும், பேராவூரணியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் துறை சாா்பில் குழந்தைகள் மையத்தையும் ஆய்வு செய்தாா்.

பேராவூரணியில் ரூ. 4 கோடியே 90 லட்சம் அரசு மானியத்தில் 21 உறுப்பினா்களின் பங்களிப்புடன் கூடிய பேராவூரணி கயிறு உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி தொடக்கம் குறித்து கேட்டறிந்தாா். நாட்டாணிக்கோட்டை தெற்கு கிராமத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டு ஆதாா் அட்டை கிடைக்க சம்பந்தப்பட்டவா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 530 மனுக்களைப் பெற்றாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ,தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் , பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இறுதியாக பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →