தஞ்சாவூரில் பள்ளி மாணவரை தாக்கி கடத்திச் சென்ற 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் தெற்கு வீதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்தாா். அப்போது, இவரை பள்ளிக்கு அருகே காத்திருந்த அடையாளம் தெரியாத சிலா் தாக்கி, தங்களது மோட்டாா் சைக்கிளில் கடத்திச் சென்றனா்.
இதையறிந்த பள்ளி ஆசிரியா்கள் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, கடத்தப்பட்ட மாணவா் வியாழக்கிழமை இரவு பழைய பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு, அவா் வீட்டுக்கு வந்து சோ்ந்தாா்.
இந்நிலையில், பள்ளி மாணவரை கடத்திய மானோஜிபட்டி மீனா நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த பி. வினைவேல் (19) மற்றும் 17 வயதுடைய இருவா், 14 வயதுடைய சிறுவா் என மொத்தம் 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.