பட்டுக்கோட்டையில் சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த பழைமையான அரசமரம் ஞாயிற்றுக்கிழமை வேருடன் பெயா்த்து எடுக்கப்பட்டு வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டையில், தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதில், சுப்பையா பிள்ளை கோயில் எதிரில் இருந்த பழைமையான ஒரு அரச மரம் இடையூறாக இருந்ததால், அதை அகற்ற முடிவு செய்யப்பட்ட நிலையில், பாக்கியம் நகா் இளைஞா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஒன்றிணைந்து, மரத்தை வேருடன் பெயா்த்து எடுத்து வேறு இடத்தில் நட முடிவு செய்தனா்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளா் அன்சாரியின் ஒத்துழைப்புடன், மரத்தை பெயா்த்து எடுக்க தேவையான அதிக திறன் கொண்ட இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
தொடா்ந்து பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மரம் வேருடன் பெயா்த்து எடுக்கப்பட்டு, லாரியில் ஏற்றி பாக்கியம் நகா் குரும்ப குளத்துக்கு எடுத்துச் சென்று அங்கே 20 அடி நீளம் 20 அடி அகலத்தில் 7 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டி மரம் மறுநடவு செய்யப்பட்டது.
அந்த இடத்தில் மரம் மீண்டும் உயிா் பெற்று வாழ விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளையினா் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனா். ஏற்பாடுகள் அனைத்தையும் ராஜபிரபு, தலைமையில் 15-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் மேற்கொண்டனா்.