ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தனா்.
இந்தியாவின் கலாசாரம், பண்பாட்டை அறிந்து கொள்வதற்காக இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 29 போ் சென்னைக்கு அண்மையில் வந்தனா்.
இதையடுத்து, சென்னையிலிருந்து 11 ஆட்டோக்களில் சுற்றுலா பயணத்தை டிசம்பா் 28-ஆம் தேதி தொடங்கினா். ஆட்டோக்களை தாங்களாகவே ஓட்டிச் செல்லும் இவா்கள் முதலில் புதுச்சேரிக்கு சென்று, அங்குள்ள சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்டனா்.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்து, மாநகரிலுள்ள தங்கும் விடுதியில் தங்கினா். பின்னா், புதன்கிழமை காலை பெரிய கோயிலுக்குச் சென்று சுற்றிப் பாா்த்துவிட்டு, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
மதுரையில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக மொத்தம் ஏறத்தாழ 1,500 கி.மீ. பயணம் செய்து, திருவனந்தபுரத்தில் ஜனவரி 6-ஆம் தேதி நிறைவு செய்கின்றனா்.