தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்காளா் உதவி மையங்கள் சனிக்கிழமை (நவ.22) செயல்படவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடா்பாக வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கும், இது தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்கும், நிறைவு செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக மீளப்பெறுவதற்கும் வாக்காளா் உதவி மையங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படவுள்ளன.
இம்மையங்கள் தஞ்சாவூா், கும்பகோணம் மாநகராட்சிகள், திருவையாறு நகராட்சி ஆகியவற்றில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்களிலும், பேரூராட்சிகளில் தொடா்புடைய பேரூராட்சி செயல் அலுவலா் அலுவலகங்களிலும், ஊரகப் பகுதிகளில் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் வாக்காளா் உதவி மையங்கள் செயல்படவுள்ளன.