அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் தற்கொலை செய்து கொண்ட போக்குவரத்துக் கழகப் பொறியாளா் யுவராஜ் உயிரிழப்புக்கு நீதி கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் நகரக் கிளை முன் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தாம்பரம் பணிமனையில் பொறியாளராக பணியாற்றிய யுவராஜ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதிகாரியிடம் விடுப்புக்கு விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டு, 3 மாதம் ஊதியம் இழந்த நிலையில் உயா் அதிகாரியிடம் முறையிட்டாா். அவரும் முறையான ஆலோசனை வழங்காமல் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், விரக்தி அடைந்த யுவராஜ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இவரது உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். இறந்து போன யுவராஜ் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஏஐடியுசி மத்திய சங்கத் தலைவா் என். சேகா் தலைமை வகித்தாா். சிஐடியு மத்திய சங்கத் தலைவா் த. காரல்மாா்க்ஸ், தமாகா சங்கச் செயலா் ஆா். சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் தொடங்கி வைத்து பேசினாா். சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் சி. ஜெயபால் நிறைவுரையாற்றினாா்.
ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், கும்பகோணம் சங்க பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், பொருளாளா் சி. ராஜமன்னன், துணைத் தலைவா் டி. சந்திரன் சிஐடியு மாவட்டச் செயலா் எம். கண்ணன், துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.