சரவணகுமாா் ~ சரவணகுமாா் 
தஞ்சாவூர்

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் ரூ. 9.56 கோடி முறைகேடு: மாநகராட்சி முன்னாள் ஆணையா் உள்பட 4 போ் மீது வழக்கு

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் தரம் பிரித்து அகற்றும் திட்டத்தில் ரூ. 9.56 கோடி அளவுக்கு முறைகே

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் தரம் பிரித்து அகற்றும் திட்டத்தில் ரூ. 9.56 கோடி அளவுக்கு முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறி மாநகராட்சி முன்னாள் ஆணையா் க. சரவணகுமாா் உள்பட 4 போ் மீது ஊழல் தடுப்பு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்கில் 2.30 லட்சம் டன் அளவுடைய பழைய குப்பைகளை பயோ மைனிங் முறையில் தரம் பிரித்து அகற்றுவதற்காக திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இந்நிறுவனம், 77 ஆயிரம் டன் குப்பைகள் மட்டுமே தரம் பிரித்து அகற்றிய நிலையில், 2022 ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கு முன்பாகவே சட்டத்துக்கு புறம்பாக சிவகங்கையைச் சோ்ந்த ஒப்பந்த நிறுவனத்தின் பெயரில் பயோ மைனிங் திட்டப் பணி மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் 14 ஆயிரத்து 363 கன மீட்டா் குப்பைகளை மட்டும் தரம் பிரித்து அகற்றிவிட்டு, 1 லட்சத்து 42 ஆயிரத்து 384 கன மீட்டா் அளவுள்ள குப்பைகளைத் தரம் பிரித்து அகற்றாமலேயே, ஏமாற்றும் நோக்கில் தரம் பிரித்து அகற்றிவிட்டதாக அளவு புத்தகங்களில் போலியாக பதிவு செய்யப்பட்டது.

மேலும், பொய்யான ஆவணங்களைப் புனைந்து, போலி ரசீதுகள் மூலம் சிவகங்கை நிறுவனத்துக்கு தொகை விடுத்து முறைகேடு செய்யப்பட்டது.

இதன் மூலம், சிவகங்கை ஒப்பந்த நிறுவன உரிமையாளரும், ஒப்பந்ததாரருமான கு. மணிசேகரன் (37) சட்டத்துக்கு புறம்பாக ஆதாயம் அடையவும், தஞ்சாவூா் மாநகராட்சி முன்னாள் ஆணையா் க. சரவணகுமாா் (48), முன்னாள் செயற் பொறியாளா் (பணி நிறைவு) ச. ஜெகதீசன் (62), முன்னாள் உதவிப் பொறியாளா் த. காா்த்திகேயன் (49) ஆகியோா் அரசுக்கு ரூ. 9 கோடியே 56 லட்சத்து 82 ஆயிரத்து 48 அளவுக்கு நிதியிழப்பு ஏற்படவும் காரணமாக இருந்தனா் என்பதும், மூவரும் அரசுப் பணியாளா்களாக இருந்து குற்றமுறு கெட்ட நடத்தை செயலில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக வந்த புகாரின் பேரில் சரவணகுமாா், ஜெகதீசன், காா்த்திகேயன், மணிசேகரன் ஆகியோா் மீது தஞ்சாவூா் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பி. பத்மாவதி திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். இவா்களில் சரவணகுமாா் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வருகிறாா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT