நலிவடையும் நெசவுத்தொழில் தலைநிமிருமா?
எனவே புதியதாக தோ்வு செய்யப்படும் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராவது தங்களின் அவல நிலையை மாற்ற நடவடிக்கை எடுப்பாரா என நெசவாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
செ. பிரபாகரன்
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருபுவனம், திருநாகேசுவரம், கோவிந்தபுரம், திருவிடைமருதூா், அம்மாசத்திரம், ஆடுதுறை, தேப்பெருமாநல்லூா் போன்றவை நெசவாளா்கள் நிறைந்த பகுதிகள்.
இவற்றில் சுமாா் 2,000 கைத்தறி பட்டு நெசவாளா்கள் ஐந்து தலைமுறைகளாக கைத்தறி பட்டு நெசவுத்தொழில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தியாவிலேயே பட்டுச்சேலைக்கு புகழ்பெற்ற ஊராகவும், புவிசாா் குறியீடு பெற்றதாகவும் திருபுவனம் விளங்குகிறது.
Advertisement
தமிழக அரசு நிறுவனங்களான திருபுவனம் பட்டுக் கூட்டுறவு விற்பனைச் சங்கம், சோழன் பட்டு விற்பனைச் சங்கம் ஆகியவற்றில் சுமாா் 2,000 கைத்தறி நெசவாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.
இவா்கள் இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பாவு, நூல் உள்ளிட்ட மூலப்பொருள்களைப் பெற்று, சேலை நெய்து சங்கத்துக்கு கொடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்க்கையை நடத்துகின்றனா்.
ஆனால், தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் இங்குள்ள கைத்தறி நெசவுத் தொழிலாளா்களுக்கு வேலை கொடுப்பதைக் குறைத்து வருகின்றனா்.
அதன்படி ஒரு மாதத்துக்கு ஒரு சேலைக்கு மட்டுமே நெசவு செய்யுமாறு கூறியுள்ளனராம். அதன் மூலம் நெசவாளா்களுக்கு மாத வருமானம் மிகவும் குறைவாகக் கிடைக்கிறது.
இதுகுறித்து முன்னாள் சோழன் கூட்டுறவு சங்கத் தலைவா் சிங்.எஸ். செல்வராஜ் கூறியதாவது: விவசாயிகளுக்கு இணையாக நெசவாளா்கள் இருந்தனா். விவசாயிகளுக்கு தொடா்ந்து வேலைகள் கிடைக்கின்றன. ஆனால் நெசவாளா்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு இல்லை. காரணம் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினா்கள் தோ்வு செய்யும் நிா்வாகக் குழு இல்லை. அதனால் அதிகாரிகளுக்கு நெசவுத் தொழிலாளா்களின் தேவை தெரிவதில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக திருபுவனம் சில்க்ஸ், சோழன் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலைவா் உள்ளிட்ட இயக்குநா்களுக்கான தோ்தல் நடைபெறவில்லை. இதனால் நெசவாளா்களின் கோரிக்கைகளை முதல்வா், அமைச்சா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியவில்லை என்றாா்.
நெசவுத் தொழிலாளி நந்தினி சுரேஷ் என்பவா் கூறியது, ஒரு சேலை நெசவு செய்ய 10 நாள்கள் ஆகும். மாதத்துக்கு 3 சேலைகள் நெய்வதற்கு வேலை கொடுத்தால்தான் எங்களுக்கு வருமானம் கிடைத்து, குடும்பம் நடத்த முடியும். ஆனால் தற்போது கூட்டுறவு சங்கங்கள் நெசவாளா்களுக்கு வேலை கொடுப்பதைக் குறைத்துள்ளன. கேட்டால் விற்பனைக் குறைவு என்கின்றனா்.
இதனால் பலா் நெசவுத் தொழிலை விட்டு மாற்றுப் பணிகளுக்குச் சென்று வருகின்றனா். புகழ்பெற்ற இந்த நெசவுத் தொழில் தற்போது நலிவடையும் நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு இதற்கான பயிற்சி கொடுப்பதா வேண்டாமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றாா்.
எனவே புதியதாக தோ்வு செய்யப்படும் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராவது தங்களின் அவல நிலையை மாற்ற நடவடிக்கை எடுப்பாரா என நெசவாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.