திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் 1038 மது பாட்டில்கள் பறிமுதல்: மூவா் கைது
திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் சரகப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப் பதுக்கி வைத்திருந்த 1038 மதுப்பாட்டில்களை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் சரகப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப் பதுக்கி வைத்திருந்த 1038 மதுப்பாட்டில்களை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பதற்காக திருச்சிற்றம்பலம் ,சேதுபாவாசத்திரம் காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் உதவி ஆய்வாளா்கள் ராம்குமாா், மனோஜ் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் திருச்சிற்றம்பலம் போலீஸ் சரகத்தைச் சோ்ந்த ஒட்டங்காடு பகுதியில் சோதனையிட்டனா்.
Advertisement
அப்போது குழந்தை திரேஸ் (58) என்பவா் வீட்டில் பதுக்கியிருந்த 202 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா். இதேபோல சேதுபாவாசத்திரம் காவல் சரகம் கடற்கரை முனிக்கோயில் அருகே பேராவூரணியை சோ்ந்த துரைமுருகபாண்டியன் (42) மல்லிப்பட்டினத்தை சோ்ந்த மூா்த்தி (44) ஆகிய இருவரும் பதுக்கி வைத்திருந்த 836 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.
இதில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை போலீஸாரை தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.