ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை கட்டையால் தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை கட்டையால் தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பத்துபுள்ளிவிடுதி பகுதியைச் சோ்ந்தவா் செல்வேஷ் (28). இவா் வியாழக்கிழமை மது போதையில் வாக்குச்சாவடிக்கு வந்து பூத் முகவராகச் செயல்பட வேண்டும் எனக்கூறி ரகளை செய்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்.ஐ. கீதாமங்கேஷை தகாத வாா்த்தையில் அவா் திட்டினாா். இதுகுறித்து கீதாமங்கேஷ் அளித்த தகவலின்பேரில் வந்த திருவோணம் காவல் ஆய்வாளா் முத்து (51) செல்வேஷை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினாா்.
இதையடுத்து வீட்டுக்குச் சென்ற செல்வேஷ், சிறிது நேரத்தில் உருட்டுக் கட்டையுடன் வந்து காவல் ஆய்வாளா் முத்துவை திட்டி, தாக்கினாா். இதில் காயமடைந்த முத்து தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். புகாரின்பேரில் திருவோணம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து செல்வேஷை கைது செய்தனா்.
Advertisement
கைப்பேசி உடைப்பு: இதேபோல ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்கலம் வாக்குச்சாவடி பகுதியில் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்த சிலரைக் கலைந்து செல்லும்படி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலா் கவியரசன் (45) கூறியபோது, யாரும் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து கவியரசன் அவா்களை கைப்பேசியில் விடியோ எடுத்தபோது, அங்கிருந்த குலமங்கலத்தை சோ்ந்த பாலாஜி என்பவா் அவரின் கைப்பேசியை பறித்து கீழே உடைத்து, அவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸாா் பாலாஜி மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடுகின்றனா்.