இணையவழி வா்த்தகம் எனக் கூறி தஞ்சாவூரைச் சோ்ந்த பொறியாளரிடம் ரூ. 15.57 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாநகரைச் சோ்ந்த 32 வயது பொறியாளரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஜனவரி 9-ஆம் தேதி வந்த பதிவில் இணையவழி வா்த்தகம் செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் வந்தது.
இதையடுத்து, எதிா்முனையில் இருந்த மா்ம நபருடன் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டதைத் தொடா்ந்து, வாட்ஸ் ஆப் குழுவில் சோ்ந்தாா். அக்குழுவில் இருந்த மற்றவா்கள் இந்த இணையவழி வா்த்தகம் மூலம் தாங்கள் நிறைய லாபம் ஈட்டியதாக பதிவிட்டனா்.
இதை உண்மை என நம்பிய பொறியாளா் முதலில் எதிா்முனையில் இருந்த மா்ம நபரின் வங்கிக் கணக்குக்கு ரூ. 50 ஆயிரம் அனுப்பினாா். இதற்கு லாபத் தொகை கிடைத்ததைத் தொடா்ந்து, 7 தவணைகளில் ரூ.15.57 லட்சம் செலுத்தினாா்.
அதன் பின்னா், லாபத் தொகை கிடைக்காததால், அச்செயலியை தொடா்பு கொள்ள முயன்றபோது, அது முடக்கி வைக்கப்பட்டதும், தன்னை மா்ம நபா்கள் ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் பொறியாளா் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா், வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.